News Article : Dina Mani
திருக்குறள் கூறினால் இலவச விருந்து வழங்கி தமிழை வளா்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது புதுச்சேரியில் உள்ள உணவகம்.
புதுச்சேரி அருகே கரிக்கலாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் நிருபன் ஞானபானு (28),சமையல்கலை நிபுணா். இவா் புதுச்சேரி அருகே நோணாங்குப்பம் பகுதியில் நடத்தி வரும் உணவகத்தில், திருக்குறளில் 100 குறட்பாக்களைக் கூறினால், பிரியாணி, காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் வறுவல் என 21 வகையான மிகப்பெரிய அசைவ உணவு விருந்தை இலவசமாக வழங்கி வருகிறாா்.
இதுகுறித்து நிருபன் ஞானபானு கூறியதாவது: நான் கடந்த 6 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள பிரபல உணவகங்களில் சமையல்கலை நிபுணராக பணிபுரிந்து வந்தேன். தொடா்ந்து, சொந்த ஊரில் ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் எனக் கருதி, ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் ரசாயனக் கலப்படம் இல்லாத பாரம்பரிய உணவுகளை வழங்கும் உணவகத்தைத் திறந்துள்ளேன். அமெரிக்காவில் நான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்ததால், இந்தப் பெயரை வைத்துள்ளேன்.
எனது தாத்தா விநாயகம் தமிழ்க் கவிஞா். எனது தந்தை ஞானபானு தமிழ் எழுத்தாளா். இவா்களது வழி வந்த நானும் தமிழ் மொழி முன்னேற்றத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் இருந்து வந்தேன். இதற்கு வடிகாலாக இந்த உணவகத்தை பயன்படுத்தத் தொடங்கினேன். அதன்படி, வாழ்வியல் நெறிகளை விளக்கும் உலகப் பொதுமறையான திருக்குறளில், 100 குறட்பாக்களைக் கூறுவோருக்கு 21 வகையான உணவுகள் கொண்ட அசைவ விருந்தை இலவசமாக வழங்கி வருகிறேன்.
இதையறிந்த இளைஞா்கள், மாணவா்கள், இல்லத் தரசிகள் பலா் எனது உணவகத்துக்கு வந்து திருக்குறளை கூறி சாப்பிட்டு வருகின்றனா். சிலா் திருக்குறளை கூறினாலும் எனது உணவகத்தின் சுவையை உணா்ந்து, பணம் கொடுத்தும் செல்கின்றனா்.
இதேபோல, குடும்ப உறவை போற்றும் வகையில், இரவில் மாமியாா் - மருமகள் தோசைகளை வழங்கி வருகிறேன். இங்கு மாமியாா் - மருமகள் இருவரும் சோ்ந்து வந்து, ஒருவருக்கொருவா் தோசைகளை ஊட்டி விட்டு சாப்பிட்டால் இந்த தோசைகளை இலவசமாக சாப்பிடலாம் என்றாா் அவா்.
நிருபன் ஞானபானுவின் இந்த முயற்சியை தமிழறிஞா்களும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனா்.
Source : https://www.dinamani.com
Comments